தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனி முன்சன் நகரில் நினைவு கூரப்பட்டது -2021

972 0

முள்ளிவாய்க்கால் உச்சக் கட்டத் தமிழினப் படுகொலையின் வலி சுமந்த நினைவு நாள் முன்சன் நகரில் 18.05.2021 செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சத்துக்கிடையிலும் முகக்கவசங்கள் அணிந்தபடி முன்சன் வாழ் தமிழீழ மக்களும் அதனை அண்டியுள்ள நகரங்களில் வாழும் தமிழீழ மக்களும் அந் நிகழ்வில் இணைந்து, மண்ணின் விடியலுக்காய் மரணித்த மாவீரர்களுக்கும் சிங்களப் பேரினவாத அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கும் தமது மலர் வணக்கத்தையும் சுடர் வணக்கத்ததையும் செலுத்தினர்.

15.30 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, குன்சன் கவுசன் நகரச் செயற்பாட்டாளர் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மக்கள் தமது உறவுகளுக்கு மலர்வணக்கமும் சுடர்வணக்கமும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து எமது இளையோர் யேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில்  எமது தாயகத்தின் இன்றைய நிலமை பற்றியும் 2009 மே 18 அன்று எமது மக்களுக்கு நடந்த இனப்படுகொலை பற்றியும் விபரித்துக் கூறினார்கள். அத்துடன் நூர்ன்பேர்க் தமிழாலய நிர்வாகி யேர்மன் மொழியில் அனைத்து நாட்டு மக்களையும்; பத்திரிகைத் துறைகளையும் பார்த்து, தமிழீழ தேசத்தையும் எமது இனத்தையும் திரும்பிப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். இறுதியாக17.45 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலோடு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரம் ஒலிக்க, என்றோ ஒருநாள் தமிழீழம் என்றொரு தேசம் மலரும் என்ற நம்பிக்கையுடன் நினைவு வணக்கம் நிறைவுபெற்றது.