18. 5.2021 செவ்வாய்க்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் இலங்கை அரசினால் தமிழீழ மக்களின் மீது நடாத்தப்பட்ட 2009 மே 18 தமிழின அழிப்பின் உச்ச நாள் நினைவு கூரப்பட்டது.
உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சத்தின் உச்சக்கட்டத்திலும் யேர்மனி ஸ்ருட்காட் நகரத்திலும் அதன் அயல் நகரங்களில் வாழும் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து எம் மக்களுக்கு நிகழ்ந்த இனவழிப்பின் உச்சத்தை உலகத்திற்கு எடுத்தியம்பினர்.
அன்று முழுவதும் இயற்கையின் சீற்றம் அதிகரித்திருந்த போதிலும் கொட்டும் மழையிலும் வெட்ட வெளியில் வீசிய பலமான காற்றின் வேகத்திற்கும் ஈடுகொடுத்தபடி இயற்கை சில நிமிடங்களுக்கு ஒருமுறை கொடுத்த சந்தர்பங்களைப் பயன்படுத்தி வந்திருந்த மக்கள் தங்கள் சுடர் வணக்கத்தையும் மலர் வணக்கத்தையும் செலுத்தினர்.
முதல் நிகழ்வாக பொசுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரினை ஸ்ருட்காட் நகரத்தில் உள்ள அகதிகள் வட்டத்தின் பொறுப்பாளர் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியினை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. லோகானந்தம் அவர்கள் ஏற்றிவைத்தார். பின்பு ஈகைச்சுடரினை புறுக்ஸ்சால் நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு சிவா அவர்கள் உணர்வு பூர்வமாக ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து பொது வணக்கத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மலர் மாலையினை லூட்விக்ஸ்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. குணாளன் அவர்களும் முல்லாக்கர் கோட்டப் பொறுப்பாளர் திரு. மகேசன் அவர்களும் இணைந்து அணிவித்தார்கள். தொடர்ந்து மக்கள் அணியாக வந்து சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தினர் அத்தோடு மேடைநிகழ்வாக இசைவணக்கம் இடம்பெற்றது. அவ்வேளையில் இயற்கை கொட்டும் மழையாக வந்து இடைவேளை தந்தது. கூடாரத்திற்குள்ளும் தங்கள் வாகனத்திற்குள்ளும் தஞ்சமடைந்த மக்கள் மழை நின்றதும் திடலினில் மீண்டும் கூடினர்.
நடனாஞ்சலி, பேச்சு, கவிதை என்பவற்றுடன் சிறப்புரையும் இடம்பெற்றது. பின் மே 18 வாரத்தில் எமது மக்கள் தாயகத்தில் குற்றுயிராக பசித்த வயிற்றுடன் கந்தகக்காற்றை சுவாசித்தபடி இருக்க, அனைத்துலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்க! சிங்களம் எம் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்க, எம் உறவுகள் அருந்திய உப்புக்கஞ்சியை ஞாபகப்படுத்தி வந்திருந்த மக்களுக்கு உப்புக் கஞ்சி வழங்கப்பட்டது.
பின் தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் நம்பிக்கைக் கோசத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.














































































































