மரக்கறிகளின் விலை ரூ. 400 – ரூ. 500 வரை அதிகரிக்கலாம் – விவசாயிகள் எச்சரிக்கை!

234 0
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இரசாயன உர வகைகளுக்கும் கிருமி நாசினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் வண்ணம் செயற்படுகின்றார்கள் இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது,

அரசாங்கம் இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வது தொடர்பாக தடை விதித்திருக்கின்ற நிலையில் ஒரு சில வியாபாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை இலாபம் பெருகின்ற வகையில் தங்களுடைய வியாபார நிலையங்களில் இரசாயன உர வகைகளையும் கிருமி நாசினிகளையும் பதுக்கி வைத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை காலமும் வழங்கப்பட்ட கழிவுத் தொகை வழங்கப்படுவதில்லை. என்ன விலை குறிப்பிடப்பட்டுள்ளதோ அதே விலைக்கே விற்பனை செய்கின்றார்கள். இது தொடர்பாக விவசாயிகள் கேள்வி கேட்டால் வேறு இடங்களில் சென்று பெற்றுக் கொள்ளுங்கள் என்ற கடுமையான தொனியில் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் இரசாயன உர வகைகளை தேவையான அளவிற்கு பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காரணமாக ஒரு சில வியாபாரிகள் 50 கிலோ மூடைகளை விற்பனை செய்யாமல் மூடைகளை பிரித்து ஒருவருக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் வழங்குகின்றார்கள். அதற்கு காரணம் 50 கிலோ மூடையாக விற்பனை செய்கின்ற பொழுது 1300.00 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும். அதனை கிலோவாக விற்பனை செய்தால் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் பாரிய இலாபத்தை பெற்றுக் கொள்கின்ற நோக்கத்திலேயே இவ்வாறு செயற்படுகின்றார்கள்.

இந்த நிலைமை காரணமாக தற்பொழுது அறுவடை மிகவும் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் 300 முதல் 400 அல்லது 500 ரூபாய் வரை விலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாகவே விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மாவட்டத்தில் மாத்திரமல்ல இந்த பிரச்சினை ஏனைய மாவட்டங்களிலும் இருப்பதாக தெரிய வருகின்றது. தற்போதைய கொரோனா நிலைமையில் அனைவரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்ற காரணத்தால் விலை கட்டுப்பாடு தொடர்பான செயற்பாடுகள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் விவசாயிகள் பாரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதனை நம்பி தொழில் செய்கின்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல. இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நிலைமை சுமூகமாக வரும் வரையில் இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் அநேகமானவர்கள் வேறு வருமானம் இல்லாதவர்கள் அவர்கள் தனியே விவசாயத்தை மாத்திரமே நம்பி இருக்கின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமடையும் எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.