அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் – வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

30 0

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை சுட்டெரிக்க இருக்கிறது.

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஒரு சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது.

இந்நிலையில். இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கி தொடர்ந்து 25 நாட்கள் இருக்கும். அதாவது வரும் 29-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை காரணமாக நோய்ப் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்திருந்தது. இதனால் மாநகரப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தை பெரிதாக பொதுமக்கள் உணரவில்லை. அதேநேரம், வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால் மின்விசிறிகள், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் ஓய்வின்றி இயங்கின.

நடப்பாண்டு கொரோனா நோய் பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளால் பகலிலும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைமழையும் பெய்து வருகிறது. இதனால் பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.

மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தைத் தவிர்க்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.