தடுப்பூசி போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம்- பஞ்சாயத்து தலைவர் விழிப்புணர்வு

253 0

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தலுடன் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை அவசியம் எடுத்துக் கொள்ளுமாறும் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தலுடன் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை அவசியம் எடுத்துக் கொள்ளுமாறும் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

முன்கள பணியாளர்களை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் தடுப்பூசி திருவிழாவை 10 நாட்களுக்கு அரசு நடத்தியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும் தடுப்பூசி எடுத்துக் கொள்வதின் பலன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வந்தால் 1 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்டது புங்கனூர் பஞ்சாயத்து. இதன் ஊராட்சி மன்ற தலைவராக தாமோதரன் என்பவர் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ் வாதாரம் இழந்த தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு தினமும் உணவு தயாரித்து வழங்கினார்.

தற்போது இரண்டாவது அலையில் சிக்கி வேலையிழந்தவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தவறாமல் செய்து வருகிறார். இதற்கிடையே தடுப்பூசியின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி வரும் அவர் அருகிலுள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புங்கனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். தக்காளியின் விலை குறைந்திருந்த போதிலும் மக்களை ஊக்கப்படுத்தவே இந்த நூதன விழிப்புணர்வை கையில் எடுத்ததாக தாமோதரன் தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று பலரும் இன்று கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வந்து அதற்கான சான்றிதழை காண்பித்து ஒரு கிலோ தக்காளியை வாங்கி சென்றது புதுமையாகவே இருந்தது.