கழிப்பறைக்காக விநோத பிரசாரம்

389 0

toiletதிறந்தவெளியில் காலைக்கடன்களை நிறைவேற்றாமல், வீட்டில் கழிப்பறை கட்டுமாறு  கூறி கர்நாடகாவில் ஊராட்சித் தலைவர் ஒருவர் விநோதமான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த ஊராட்சி தலைவர், மக்களின் கால்களில் வீழ்ந்து வீடுகளில் கழிப்பறைகளை அமைக்குமாறு கோரிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் கங்கவாதி அருகே ராம்நகர் கிராமம் அமைந்துள்ளது அங்குள்ள 2,100 வீடுகளில் 441 வீடுகளில் மட்டுமே கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் திறந்த வெளியில் காலைக்கடன்களை நிறைவேற்றுவதால்; சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், கிராமமும் அசுத்தமடைகிறது.
எனவே, வீடுதோறும் கழிப்பறை கட்ட வேண்டும் என்ற பிரசாரத்தை ஊராட்சித் தலைவரான ஸ்ரீநிவாஸ் கர்தூரி மேற்கொண்டார். எனினும் இந்த பிரசாரத்தில் பலனில்லை என்ற காரணத்தினால் அவர் காலைவேளையில் திறந்தவெளியில் காலைக்கடன்களை நிறைவேற்றச் செல்லும் மக்களின் குறிப்பாக பெண்களை வழிமறித்து கால்களில் வீழ்ந்து கோரிக்கை விடுத்துவருகிறார்.
ஊராட்சி தலைவரின் இத்தகைய வினோத கோரிக்கையால் தற்போது சில வீடுகளில் கழிப்பறை கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கிராம மக்களில் சிலர், அவசரத்துக்கு வெளியே செல்லும்போது, மறைந்திருக்கும் ஊராட்சி தலைவர் ஸ்ரீநிவாஸ் கர்தூரி திடீரென ஓடி வந்து காலில் வீழ்வதால் திடுக்கிட்டு போகின்றனர். நிம்மதியாக காலைக்கடன்களை நிறைவேற்ற முடியாமல் அவதியுறுகின்றனர். இதனால் குறிப்பாக பெண்கள் ஊராட்சி தலைவர் ஸ்ரீனிவாஸ் எங்காவது ஒளிந்திருக்கிறாரா? என்று அவதானித்துவிட்டே காலைகடன்களை கழிக்கச்செலவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.