அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி

176 0

கடந்த 6-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி. சண்முகம் போட்டியிட்டார். இதற்காக அவர், தீவிர பிரசாரம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அவ்வையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சி.வி.சண்முகம்(வயது 56). இவர், தமிழக சட்டம் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராகவும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். கடந்த 6-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார். இதற்காக அவர், தீவிர பிரசாரம் செய்தார்.

இதனிடையே அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளும் தென்பட்டதால் அவர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

இந்த பரிசோதனை முடிவு நேற்று மாலை வந்தது. அதில், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.