அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா

190 0

வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரியால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரியால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் வன்முறைகள் அரங்கேறின.

இதனிடையே டான்ட் ரைட் கொல்லப்பட்டது ஒரு விபத்து என்றும், போலீஸ் அதிகாரி கிம் பாட்டர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் ‘டாசர்’ துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பதில் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதாகவும் புரூக்ளின் சென்டர் நகர போலீசார் தெரிவித்தனர்.‌

ஆனாலும் மக்கள் இதனை ஏற்க மறுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‌

இந்த நிலையில் டான்ட் ரைட்டை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி கிம் பாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரின் தலைமை போலீஸ் அதிகாரியான டிம் கேனனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.‌ இவர்களின் முடிவு போராட்டத்தை தணித்து சமூகத்தில் அமைதியை கொண்டுவர உதவும் என புரூக்ளின் சென்டர் நகர மேயர் எலியட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.