பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான Noisiel (நுவாசியல்) மாநகரமுதல்வர் Mathieu VISKOVIC அவர்களுடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சந்சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

269 0

இச்சந்திப்பில் நுவாசியல் தமிழ்ச்சங்கத்தினரும், பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் பிரிவு, மற்றும் தமிழீழ மக்கள் பேரவையினரும் சந்திப்பை மேற்கொண்டனர். கடந்த 08.04.2021 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நோசியல் மாநகர முதல்வர் காரியாலயத்தில் நடைபெற்றது.

முதல்வர் அவர்களுடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர், மற்றும் துணை முதல்வர் சிராணி (தமிழ் இளையவர் ) மற்றும் மாநகர உத்தியோகத்தர்களுடன் நுவாசியல் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. பரமு புலேந்திரன், செயலாளர் ந. சுபந்தினி, பொருளாளர் பிரபாகரன் அகல்யா இவர்களுடன் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பாலகுமார், தமிழீழ மக்கள் பேரவை திரு. பிரதீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் முதல்வர் இங்கு வாழும் மக்களுக்கு இந்த கோவிட் 19 காலத்தில் தன்னால் முடிந்த பங்கை ஆற்றிவருவதையும், இங்கு வாழும் தமிழ் மக்களின் நிலவரங்களை அறிந்து உதவிபுரியத் தன்னுடன் துணைமுதல்வர் பணியாற்றுவதையும் தமிழ் மக்களின் விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளதையும் இங்கு வாழும் மக்களின் பிள்ளைகளின் தாய்மொழிக்கல்வி எதிர்கால நிலைப்பாடுகள் தமிழ்ச்சங்க முன்னெடுப்பிற்கு தன்னால் முடிந்த பங்கை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

எமது தரப்பில் முதல்வருக்கும் அவர்சார்ந்தவர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்ததுடன். தாயகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கு நிலவரங்களையும், ஐ.நா. 46 ஆவது கூட்டத் தொடரில் சிறீலங்கா அரசின் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றியும் அதில் பிரான்சு நாட்டின் தமிழ்மக்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டையும் கூறியதுடன், இந்த வருடம் பிரான்சில் பல மாநகரங்களில் தமிழ் மக்களின் நிரந்தரத்தீர்வுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும், அவ்வாறானதொரு ஆதரவினை தங்கள் தரப்பால் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தான் இதுபற்றி துணை முதல்வர் மற்றும் மாநகர உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து பிரான்சு நாட்டின் சனாதிபதிக்கு கடிதம்மூலம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். 1 மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. தாயகத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக்கு நீதிவேண்டியும், ஈழத்தமிழர் நாம் சுயாதீனமாக நிம்மதியாக வாழ சர்வதேசமும், ஐரோப்பிய நாடுகளும், பிரான்சு நாடும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பல்வேறு சனநாயக அரசியல் பணிகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.