தாய், தந்தை கண்முன் பலியான 3 வயது ஆண் குழந்தை! – கெகிராவையில் சோகம்!

27 0
கெகிராவை, 79 ஆவது கிலோ மீற்றர் தூண் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (07) மாலை 5.30 மணியளவில் வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்று மீண்டும் வீதியை நோக்கி திருப்ப முற்பட்ட போது கெகிராவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று மோட்டார் வாகனம் மீது மோதியுள்ளது.

பின்னர் வீதியின் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் மற்றும் அவர்களது 3 வயது ஆண் குழந்தை படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதேவேளை, கலேவெல, அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பெலிகமவு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

கலேவெல பகுதியில் இருந்து குருணாகலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய பொதுஹெர பிரதேசத்தை சேர்ந்தவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.