யேர்மன் தலைநகரில் நடைபெற்ற முன்னாள் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வணக்க நிகழ்வு

159 0

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதி கோரும் தமிழர் குரலின் ஆளுருவமாகத் திகழ்ந்த ஆயர் இராயப்பு அவர்களின் வணக்க நிகழ்வு நேற்றைய தினம் உணர்வுபூர்வமாக பேர்லின் நகரில் நடைபெற்றது.

அதியுயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் திருவுருவப் படத்திற்கு பேர்லின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பொறுப்பாளர் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு , தொடர்ந்து மக்களால் மலர் தூவி சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதியுயர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகையின் நினைவுப் பகிர்வினை திரு ஞானம் அவர்கள் வழங்கியதோடு ,ஆயரின் பேர்லின் வருகையை குறிப்பிட்டு அன்றைய நாட்களின் அனுபவங்களையும் உணர்வோடு பகிர்ந்து கொண்டார்.

வணக்க நிகழ்வில் தாயகத்தில் இருந்து இணையவழி ஊடாக கலந்துகொண்ட அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் அவர்கள் ஆயருடன் உடனிருந்த அனுபவங்களையும் , தமிழினத்திற்கு அவர் செய்த சமரசமற்ற நேர்மையான பணியையும் எடுத்துரைத்தார்.

கனடாவில் இருந்து இணையவழி ஊடாக ஆண்டகையின் வணக்க நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் ஆய்வாளர் திரு நேரு குணரட்ணம் அவர்கள் ஆயர் தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை சர்வதேச அரங்கில் நேர்மையான முறையில் எப்படி பிரதிபலித்தார் என்பதை சுருக்கமாக எடுத்துரைத்தார்.

கொரோனா தொற்றுநோயின் காரணத்தால் மட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இவ் நிகழ்வு அனைத்து உறவுகளின் பங்களிப்பிலும் சிறப்பாகவும் , உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.

நீதியின் குரல் இராயப்பு ஆண்டகை நமக்கு விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர்ந்தும் தளராது முன்னெடுப்போம் எனும் உறுதியோடு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.