உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு

235 0

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்  முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு பணிகளில் முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளடங்களாக 12 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, 2542 இராணுவத்தினரும் 146 விசேட அதிரடிப்படையினரும், 9356 பொலிஸாரும் 12,030 உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

மேலும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு சேவை மற்றும் பொலிஸ் நடமாடும் சேவை ஆகியனவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பினை பிரதிநிதிப்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பயங்கரவாதிகளினால் நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 259 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல இன்னும் தங்களது உறவுகளை இழந்த நிலையில் துன்பத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாத்தியடைய வேண்டி விசேட ஆராதனைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலுக்கு காரணமான சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, தொடர் விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்ற போதிலும் தாக்குதல் நடத்தியமைக்கான காரணங்கள் குறித்து சரியான முடிவுகளை அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.