பேராயரின் இழப்பு பேரிழப்பே! தமிழ் மக்கள் பேரவை – பிரான்சு

356 0

பேராயரின் இழப்பு பேரிழப்பே!

01.04.2021

அறநெறியைப் பின்பற்றியும் மக்களை அதன்பால் வழிநடத்திக்கொண்டும் துன்பத்திலும் துயரத்திலும் உதவிக்கரமாகத் திகழ்ந்தார் பிதாமகன் அருட்தந்தை ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை அவர்கள்.

ஏசுதேவனின் புனித வாரத்தில் இறைபத மடைந்ததானது ஆற்ற முடியாத வேதனையும் பேரிழப்புமாகும்.

1940 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது குருமடக்கல்வியை பயின்று 1967 ஆம் ஆண்டு முதல் இறைபதமடையும் வரை ஆற்றிய பணிகள் அளப்பரியதாகும்.
ஈழதேசத்தில் கடந்த 70 வருடங்களாக நடைபெற்ற தமிழின அழிப்பின் கண்கண்ட சாட்சிகளில் ஒருவராக இருந்தவர்.

இத்தனை ஆண்டுகளாக அகிம்சையிலும்இ ஆயுதப்போராட்டத்திலும் நீதிகேட்டபோது சிங்கள உலகில் சிறிதளவேனும் மாற்றம் நிகழவேயில்லையே என்ற ஏக்கம் இவரிடம் நிறையவே இருந்தது.

பௌத்த தேசம் எத்தனையோ அழிவுகள்இ எண்னற்ற உயிர்பலிகள் எடுத்தும் தனது வன்முறை பாதையிலேயே பயணிக்கின்றது என்பதை 2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் சாட்சியாக இருந்து வெளிப்படுத்தியவர். வன்னிப்பிரதேசத்தில் இருந்த மக்களின் சனத்தொகையை சர்வதேசத்திற்கு சிங்கள அரசு குறைத்துக் காட்டியபோது தன்னிடம் இருந்த சரியான ஆவணப்பதிவுகளூடாக படுகொலைக்கு உள்ளானஇ காணாமல் போனவர்கள் 1 லட்சத்தி 46ஆயிரத்தி 679 பேரின் விபரங்களை வெளியிட்டார். பல்வேறு நெருக்கடிகளோடும் கத்தோலிக்க உயர்பீடத்தின் ஒத்துழையாமைக்கு மத்தியிலும் உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தவர். சிறையில் வாடிப்போய் நிற்கும் தமிழ்ச்சகோதர சகோதரிகளுக்கும் ஆறுதலாகவும்இ காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உணர்வுகளின் நீதிக்கான ஒரு குரலாகவும் சாட்சியமாகவும் வாழ்ந்தவர்.

‘நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்” என்பதற்கமைய அயராதுபாடுபட்டவர். அன்னாரின் உண்மையான ஆன்மீக ரீதியான செயற்பாடுகள்இ இறைப்பணிகூட சிங்களத்தின் கிறிஸ்தவ தலைமையினால் திட்டமிட்டுப் புறந்தள்ளப்பட்டது. தமிழின அழிப்பை கிறிஸ்தவ தலைமைப்பீடமான வத்திக்கான் தலைமைக்கு எடுத்துச் செல்லவும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்ற நிலைப்பாட்டை தலைமைப்பீடம் குரல் கொடுக்க வேண்டும் என்ற இவரின் எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்பட்ட போதும் இவர் துவண்டு விடவில்லை தளராது உழைத்துக் கொண்டேயிருந்திருக்கிறார்.

‘ஒரு தூய்மையான ஆன்மீகத்தை விசுவாசித்து ஏழைகளின் உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது என்பதற்கமைய வாழந்தவர்”

இவர் மறைவு கத்தோலிக்க உலகிற்கு வேதனைமிக்கதே. அதிலும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஈடுகட்டமுடியாத இழப்பே. இவர் உருவாக்கிய குருவானவர்கள்இ அருட்சகோதரிகள் இவரின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். அன்னார் போன்று சத்தியத்தின் உண்மையின் நீதி தர்மத்தின் வழியில் பயணிக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு தமிழ் மகன் ஒவ்வொருவனும் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.

தமிழ் மக்கள் பேரவை – பிரான்சு