நல்லக்கண்ணு உடல் நிலையில் முன்னேற்றம்

411 0

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லக்கண்ணு (வயது 95) வயது மூப்பின் காரணமாக இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

அதேநேரத்தில் சென்னை, சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மட்டும் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், அவருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நுரையீரலில் 15 சதவீதம் தொற்று பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து நல்லக்கண்ணுக்கு கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் நல்லக்கண்ணு ஈடுபடவில்லை என்றாலும் அவரது வீட்டிற்கு கட்சிகாரர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் அவருக்கு தொற்று பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிகிச்சை குறித்து டீன் தேரணிராஜன் கூறும்போது, நல்லக்கண்ணுவிற்கு நுரையீரலில் 15 சதவீதம் மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவு தொற்று இருப்பதால் அவரது உடல் நலம் நன்றாக உள்ளது.

தொடர் மருத்துவ சிகிச்சை கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் அவர் டிஸ்ஜார்ஜ் ஆவார் என்றார்.