அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு- வெளியுறவு மந்திரி பேச்சு

425 0

அமீரகத்தில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் கூறினார்.

‘ஹோப் கன்சோர்டியம்’ என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் காணொலி காட்சி கூட்டம் அபுதாபியில் நடந்தது. இதில் அமீரக மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அபுதாபியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஹோப் கன்சோர்டியம் என்ற சரக்கு போக்குவரத்து அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி விமானங்கள் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோயை கண்டறிந்த ஒரு ஆண்டுக்கு பிறகு சர்வதேச சமூகமாக நாம் இப்போது இணைந்திருக்கிறோம்.

மற்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் இணைந்து இதில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும். உலகம் முழுவதும் இன்று இறுக்கமான பிணைப்புடன் ஒரே நோக்கத்தில் சர்வதேச சுகாதார பாதுகாப்பிற்காக இணைந்துள்ளது. இதில் ஆயிரம் நிபுணர்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்த கூட்டமைப்பில் ஹோப் கன்சோர்டியம் என்ற சரக்கு போக்குவரத்து அமைப்பை நிறுவியுள்ளது.

மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப சரக்கு போக்குவரத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது இந்த புதிய சரக்கு போக்குவரத்து அமைப்பை நிறுவி அதன் சேவை தொடங்கியுள்ளதால், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ஏழை, பணக்கார நாடுகள் என்று இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் அதிக அளவில் அனுப்ப இந்த திட்டமானது பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து அமீரகம் சர்வதேச அளவில் சரக்கு போக்குவரத்தின் மையமாக விளங்குவதுடன் நெருக்கடி காலங்களில் தேவையான பொருட்களை அனைத்து நாடுகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் அனுப்பி ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

அதேபோல் கொரோனா தடுப்பூசி மட்டுமல்லாமல் உணவு மற்றும் மருத்துவ நிவாரண பொருட்களை உலகம் முழுவதும் அனுப்பவும் அமீரகம் உதவி வருகிறது. அமீரகத்தை பொறுத்தவரையில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் குடிமக்கள் மற்றும் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசியை பெற உரிமை உள்ளது. அமீரகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது தெரிந்தால் அதிவிரைவில் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.