தரமற்ற தேங்காய் எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவு

309 0
தரமற்ற தேங்காய் எண்ணை என மாதிரி பரிசோதனையில் ஒப்புவிக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்படாத எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்க பணிப்பாளர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணையில் ´அஃப்லோடாக்சின்´ என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளமை இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி தரமற்ற எண்ணையை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு அதனை மீள் ஏற்றுமதி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.வி. ஹரிப்பிரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள 13 கொள்கலன்களில் உள்ள தேங்காய் எண்ணெயில் ´அஃப்லோடாக்சின்´ என்ற புற்றுநோய்க் காரணிகள் அடங்கியுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவவல் வெளியிட்டது.

இதனை அடுத்து இது குறித்து பல தரப்பினர் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த தேங்காய் எண்ணெய் தொகை தரமற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்டதை அடையாளம் கண்டுக்கொண்டதாக தர நிர்ணய சபை தெரிவித்தது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய் எண்ணை தொடர்பில் தற்போதும் பல தரப்பினரால் விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.