ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

261 0

எம்ஜிஆர் மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த எம்ஜிஆர் விஸ்வநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2016ம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம். முந்தைய தேர்தலில் போட்டியிட்டிருக்கிறோம்.
தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திருப்பி எடுத்துவிட்டு ஆட்டோ ரிக்சா, தொப்பி போன்ற சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தற்கு விண்ணப்பித்திருந்தோம். தேர்தல் ஆணையம் 3 மாதமாக எந்த முடிவும் எடுக்கவில்லை.
தற்போதைய தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடியில் ஆட்டோ சின்னம் இருந்தும் எங்களுக்கு ஒதுக்கவில்லை. எனவே, ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். ஆட்டோ சின்னம் ஒதுக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால் இதில் தலையிட முடியாது என தெரிவித்தனர். அத்துடன், மனுவை ஏற்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.