ஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்

447 0

“இராஜதந்திர முன்னெடுப்புகளின் வெற்றியை பலம் தீர்மானிக்கின்றது. பலத்திற்கு முன்னுரிமையும் வலுவான அந்தஸ்தும் உண்டு. எமது கோரிக்கைகளின் நியாயப்பாடுகளை எமது பலம் வெளிப்படுத்துகின்றது”
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் –

தேசியத்தலைவர் அவர்களது மேற்கூறிய சிந்தனை எக்காலத்திற்கும் பொருத்தமான பொய்யாமொழி என்பதனை அனைத்துலகம் மீண்டும் மீண்டும் எமக்கு வலியுறுத்துகின்றது.
இன்றைய உலக ஒழுங்கினை பலம்தான் தீர்மானிக்கின்றது என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இராணுவரீதியாக வளர்ச்சி அடைந்தபின்பே அரசியல் இலக்குகளை அடைய முடியும் என்பதை தீர்க்கதரிசனத்தோடு தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் முன்னெடுத்ததன் நியாயப்பாடுகளை இன்று உலகம் முழுவதும் பரந்து வாழுகின்ற பல கோடி தமிழர்களும் உணர்ந்துள்ளார்கள்.

நடந்து முடிந்த 46ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் என்ற பெயரில் தொடரும் தமிழின அழிப்பிற்கு மறைமுகமான அனுமதியினை வழங்கியிருக்கிறது அனைத்துலகம். ருஷ்யா – சீனா கூட்டணி நாடுகள் ஒருபக்கமும் அமெரிக்கா – ஐரோப்பா கூட்டணி நாடுகள் இன்னொருபக்கமுமாக தமது புவிசார் அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களை பகடைக்காய்களாய் பயன்படுத்தி ஏமாற்றியுள்ள கபட நாடகத்தினை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ளவேண்டும். இன அழிப்புக் குற்றச்செயல்களை விசாரணை செய்யும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், பொஸ்னியா போரின் போது 7,000 வரையிலான முஸ்லிம் பொதுமக்களை கொன்றதன் குற்றச்சாட்டின் பேரில் சேர்பிய முன்னாள் தலைவர் அவசர அவசரமாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது.

ஆனால் குறைந்தது ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றழித்த ராஜபக்சே அரசிடமே அவர்களை விசாரணை செய்யும் பொறுப்பினை வழங்குவது விசித்திரமானது. இதனை மனித உரிமைகள் அவையிலே தீர்மானமாகவே நிறைவேற்றுவது மனிதப்பேரவலம். 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐ. நா பொதுச்சபை மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. இதன் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், பின்பற்றவும் அனைத்துலக சமுதாயம் நிரந்தரமாகப் பொறுப்பேற்றுக்கொண்டது.

ஆனால் இன்று வரை ஈழத்தமிழர்களின் இன அழிப்பு தொடர்பில் எதுவித முன்னெடுப்பகளையும் மேற்கொள்ளாதது மட்டுமன்றி தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு முண்டு கொடுத்து வரும் செயலானது உலகத்தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினையும், அவநம்பிக்கியனையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொறுப்புள்ள, மனித உரிமைகளை பேணுவதாக கூறிக்கொள்ளும் நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கவனமெடுக்காதது ஈழத்தமிழர்களாகிய எமக்கு பெரும் வேதனை அளிக்கின்றது.

நடந்து முடிந்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தமிழினப்படுகொலைக்கான அனைத்துவிதமான ஆதாரங்களும் அனைத்துலக சமூகத்தின் முன் உள்ளமை வெளிப்படையான உண்மை. இறிதிப்போரை நிறுத்தி நடந்து முடிந்த இனப்படுகொலையினை அனைத்துலக சமூகம் தடுத்திருக்கமுடியும். அன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஐ. நா பொதுச்சபையும் அதன் அங்கத்துவ நாடுகளும் இணைந்து இன்னும் என்ன செய்வதாக உத்தேசம்.

படிப்படியாக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் அழித்து தனிச்சிங்கள நாடாக மாற்றுவதுதான் ஐ. நா சபையின் நோக்கமோ என்ற ஐயம் எமக்குள் எழுகின்றது. அதனை நடந்து முடிந்த 46ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரும் அதன் தீர்மானமும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது.

உலகம் முழுவதும் பரந்து வாழுகின்ற ஒட்டுமொத்த இளைய சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.அரசியல் விழிப்புணர்வடைந்தவர்களாக, அறத்தின் வழிநின்று மிகப் பலமான போராட்டங்களை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகின்றது.நாம் புலம் பெயர்ந்து வாழுகின்ற ஒவ்வொரு நாடுகளிலும் இராஜதந்திர அரசியல் நகர்வுகளை வேகப்படுத்துவதோடு, மக்களை ஓரணியில் திரட்டி பெரும் மக்கள் போராட்டங்களை வழிநடாத்தும் பொறுப்பும் இளைய தலைமுறையின் தேசியக்கடமை ஆகின்றது.

அனைத்துலக ஒழுங்கமைப்பினைத் தீர்மானிக்கும் அரசியல் பலமாக நாம் மாறுவதனைத் தவிர வேறு வழியில்லை.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”