இலங்கை குறித்த தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றம்

317 0
இலங்கை ஒற்றையாட்சி அரசு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பதினொரு நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. போர்க்குற்றம் இருதரப்பு பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் மத்திரமே தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் கோரிய இன அழிப்புக்கான சர்வதேச நீதி குறித்து எதுவுமே கூறப்படவில்லை. அதேவேளை, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்கான ஏற்பாடுகளுக்குரிய ஆரம்பப் புள்ளியாகக்கூட 13 அமையாதென அடித்துக்கூறப்பட்டவொரு நிலையிலும், 13 இல் அதிக வகனம் செலுத்தியிருந்த இந்தியா, அதனை அமெரிக்க, பிரித்தானிய நாடுகளுக்குப் பின்னால் ஒழிந்திருந்து தீர்மானத்தில் பிரதானப்படுத்திய பின்னர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஏன் பதுங்கியது?

இந்தத் தீர்மானம் இலங்கைக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் பதினொரு நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்துள்ளதாகவும் ஆகவே 25 நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஏற்றுள்ளதென்றும் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துத் தீர்மானமாக நிறைவேற்றினாலும் அதனை இலங்கை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை எனவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் இந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஆபத்தானதென்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கூறியுள்ளார். ராஜபக்ச அரசாங்கம் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இந்தத் தீர்மானம் இந்தோ- பசுபிக் பாதுகாப்புத் தொடர்பான நகர்வுகளுக்குக் கிடைத்த மற்றுமொரு வெற்றியென அவதானிகள் கூறுகின்றனர். ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச நீதி அறவே இல்லையெனவும் அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற ஈழத்தமிழர் முன்வைத்த பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து இலங்கையை காப்பாற்றியுள்ளதாகக் கூறி அமெரிக்காவும் இந்தியாவும் சிங்கள ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளதென்றும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது சீனாவின் பிடியில் இருந்து இலங்கையைத் தங்கள் பக்கம் எடுப்பதற்கான ஒரு உத்தியே இத் தீர்மானம் என்றும் அவதானிகள் கூறுகின்றனர். இது குறித்து கூர்மைச் செய்தித் தளத்தில் ஏலவே பல விளக்கக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன.

13 ஆவது திருத்தச் சட்டமே நிரந்தர அரசியல் தீர்வுக்கான ஒரே வழியென இந்தியா கூறிய பரிந்துரைகள், பிரித்தானியா தலைமையிலான உறுப்பு நாடுகளினால் தயாரிக்கப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 13 காணப்பட்டிருந்தது. அப்போதும் இந்தியா வாக்களிக்காமல் நழுவியிருந்தது. இந்த ஆண்டும் 13ஐ தீர்மானத்தில் புகுத்திவிட்டு வாக்களிக்காமல் இந்தியா பதுங்கியுள்ளது.

ஈழத்தமிழர் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளுக்கான ஆரம்பப் புள்ளியாகக்கூட 13 அமையாதென அடித்துக்கூறப்பட்டவொரு நிலையிலும், 13 இல் அதிக கவனம் செலுத்தியிருந்த இந்தியா, அதனை அமெரிக்க, பிரித்தானிய நாடுகளுக்குப் பின்னால் ஒழிந்திருந்து தீர்மானத்தில் பிரதானப்படுத்திய பின்னர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஏன் பதுங்கியது என்ற கேள்விகள், சந்தேகங்கள் பலமாகவே எழுகின்றன.

இந்திய மத்திய அரசுக்கு முதுகெலும்பில்லை என்றே தமிழ் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

நன்றி கூர்மை.