ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிப் போராளியான பரதன் காலமானார்!

482 0

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிப் போராளியான பரதன் இராஜநாயகன் (60) லண்டனில் காலமாகியுள்ளார்.

1980 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருக்கும்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த பரதன், அந்த இயக்கத்திற்கான ஆவணமாக்கல், ஒளிப்படம் (Photography), மற்றும் தொலைக்காட்சி, வானொலி, ஒலிப்பதிவுக்கூடம், இசைப்பாடல்கள் வெளியீடு, திரைப்படத் தயாரிப்பு எனப் பலவற்றை உருவாக்குவதில் முதல் நிலைப்பங்களிப்பை வழங்கினார்.

முக்கியமாக 1986 இல் புலிகள் ஒரு பரீட்சார்த்த தொலைக்காட்சி ஒளி பரப்பு ஒன்றை “தரிசனம்“ என யாழ்ப்பாணத்தில் நடத்திப் பார்த்தனர். அதைச் செயற்படுத்தியவர் பரதனே.

அதற்கு முன்பு நண்பர்களுடன் இணைந்து குறும்படமொன்றை இயக்கினார். நல்லதொரு ஒளிப்பதிவாளரான பரதனுக்கு அந்தத் துறையில் ஈடுபாடுள்ளோர் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இதனால் புலிகளின் சுற்றுக்கு வெளிப்பரப்பிலும் ஏராளமானோர் பரதனின் நண்பர்களாக இருந்தனர்.

இதைத்தவிர, மக்களின் வாழ்க்கை, இராணுவ ஒடுக்குமுறை போன்றவற்றை அந்த நாட்களில் வீடியோ ஒளிப்பதிவு மூலம் பதிவு செய்வதிலும் தமிழகத்திற்கு அவற்றை அனுப்புவதிலும் பரதனுடைய பணிகள் அதிகமாக இருந்தன.

தரிசனம் இந்திய அமைதிப்படையின் வருகையோடு இடை நின்று விட்டது.

இந்திய அமைதிப்படை வெளியேறிய பின் 1990 இல் மறுபடியும் புலிகள் ஒலி, ஒளிபரப்புச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் கொண்டிருந்தனர். அவற்றைச் செயற்படுத்தியவர் பரதேனே. ஏற்கனவே இடை நின்ற தரிசனம் என்ற ஒளிபரப்புச் சேவையை நவீன வசதிகளோடு நிதர்சனம் என்ற பேரில் ஆரம்பித்தார் பரதன். அதனோடு இணைந்ததாக புலிகளின் குரல் என்ற வானொலிச் சேவையையும் ஆரம்பித்து இரண்டுக்குமான பொறுப்பாளராகவும் செயற்பட்டார்.

அத்துடன் புகைப்படப் பிரிவும் பரதனின் கீழேயே இயங்கியது. ஏற்கனவே அவர் ஒரு சிறந்த ஒளிப்படப் பிடிப்பாளர், அந்தத் துறையில் அறிவும் ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர் என்பதால் பல போராளிகளை அந்தத் துறையில் உருவாக்கினார். சமநேரத்தில் குறும்பட உருவாக்கத்திலும் ஈடுபட்டார் பரதன். 1991 இல் அவர் உருவாக்கிய இன்னொரு படம் “இனி”. 19 நிமிடம் இந்தப்படம். தொடர்ந்து ஞானரதன் மூலமாக முழு நீளப்படங்களை உருவாக்கினார்.

விடுதலைப்புலிகளின் இசைப்பாடல்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவை. இப்போதும் அவற்றின் ஈர்ப்புக் குறையவில்லை. இந்த இசைப்பாடல்களை உருவாக்குவதிலும் பரதனோ முன்னோடி. கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருடைய பாடல்களை தென்னிந்தியப் பிரபல பாடகர்களைக் கொண்டு பாடுவித்து களத்தில் கேட்கும் கானங்கள் என்ற இசைப்பாடல் ஒலிப்பேழையை வெளியிட்டவர். பின்பு தாயகத்தில் இசைப்பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தர்மேந்திரா கலையகம் என ஒலிப்பதிவுக் கூடத்தினை உருவாக்கி, அதிலிருந்து பல விதமான இசைப் பதிவுகளை மேற்கொண்டவர். பாடல்களை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர் பரதன். இப்படிப் பன்முக ஆளுமை கொண்ட பரதனுக்கு இயக்க வேறுபாடின்றி எல்லாத்தரப்பிலும் நண்பர்களும் தோழர்களும் இருந்தனர்.

2000 ஆண்டு புலிகளை விட்டு நீங்கிய பரதன் லண்டனில் குடியேறினார். அங்கே “மூன்றாவது கண்” என்றொரு ஒளிக்கலையாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இப்பொழுது அவருக்கு 60ஆவது வயது நடந்து கொண்டிருக்கிறது. இன்று அவர் தன்னுடைய துணைவியுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து, உயிர் நீத்துள்ளார்.

பரதனுடைய தந்தையார் சு.இராஜநாயகம் ஈழத்தின் மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர். தினக்குரல் பத்திரிகையின் வாரப்பதிப்பு முன்னாள் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் சகோதரர். போராட்டத்தில் ஈடுபட்டதால் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்த குடும்பங்களில் இராஜநாயகத்தின் குடும்பமும் ஒன்று.