இராகலையில் தீ விபத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ முன்வாருங்கள்

363 0

இராகலையில் தீ விபத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ முன்வாருங்கள் என அவர்களுக்காக நிவாரணப்பணியில் ஈடுபடும் அன்பாலயா குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் நிவாரணங்களை சேகரிக்கவுள்ள இக்குழு இவ் விடயம் தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை தோட்டம் 2 ஆம் பிரிவில் 16 வீடுகளை கொண்ட நெடுங்குடியிருப்பில் 12.03.2021 அன்று அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் உடமைகள் அனைத்தும் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. போராட்டத்தையே தினமும் வாழ்க்கையாக கொண்ட இராகலை மலையக உறவுகள் 61 பேர் இன்று நிர்க்கதியான நிலையில் பரிதவித்து கொண்டிருக்கின்றனர். இதில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 03 பேரும் அடங்குகின்றனர்.

இத்தீவிபத்தில் பெருமளவு பொருட்சேதங்கள் ஏற்பட்டு ஆடைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள், பாடப்புத்தகங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன. அட்டைக்கடியிலும் குறைந்த ஊதியத்திலும், பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கும் துன்பங்களுக்கும் முகங்கொடுத்து, வாழ்க்கை முழுதும் உழைத்து சேமித்தவை ஒரே இரவில் தீயோடு வேக, வெந்த மனங்களோடு தவிக்கும் நம் உறவுகளுக்கு கரம் நீட்ட அன்பாலயா அமைப்பினர் தங்களின் மேலான உதவிகளை நாடி நிற்கின்றனர்.

உதவ முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை எவ்விதத்திலேனும் வழங்க முடியும். இல்லாததன் ஏக்கங்களையும் இழந்தவைகளின் வலிகளையும் மனதோடு சுமக்கும் நாம் மனிதம் இறக்காத மனங்களில் இருந்து உதவிகளை கேட்கிறோம்.

திங்கட்கிழமை (15.03.2021) மாலை 3.00 மணியளவில் வவுனியா நகரத்தில் அன்பாலயா குழுவினர் வருகை தர உள்ளனர். அவர்களிடம் உங்களால் முடிந்த உதவிகளான, அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவு பொருட்கள், பாவனை நிலையில் உள்ள ஆடைகள், பெண்களுக்கான சுகாதார அணை ஆடை, பாடசாலை உபகரணங்கள், சீருடை துணிகள் போன்ற பொருட்களை வழங்கி எங்கள் முயற்சிக்கும் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கும் உதவுமாறு சமூக நலன் விரும்பிகள் மற்றும் அனைத்து அமைப்புகளையும் வேண்டி நிற்கின்றோம்.

முடிந்தவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளை வழங்குங்கள்.

எஸ்.எம்.சுரேஸ் 0094 77 93 44 750
இரா.தனுசன் 0094 77 02 05 241
ர.லனோஜ் 0094 77 27 54 401