இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவினால் வட பகுதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து இந்திய உயர்ஸ்தானிகர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உள்ளிட்டோரையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கவுள்ளதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், இந்திய உயர்ஸ்தானிகரைக் கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்துபசாரம் ஒன்றிலும் உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுடன் உயர்ஸ்தானிகர் சம்பாஷணையினை மேற்கொண்டிருந்ததாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதிகளவான முதலீடுகள் போன்றவற்றினூடாக வடமாகாணத்தின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பாக இராப்போசன விருந்துபசாரத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடல்களில் கவனம்செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

