அமெரிக்க நாடாளுமன்றம் : தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு

379 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவிய நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனா்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவிய டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அடம் பிடித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்க வரலாறு காணாத இந்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இது உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 4-ந் தேதி தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி செய்திருப்பதாக அமெரிக்க போலீசுக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது.