புதிய கட்சி ஒன்றை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அமெரிக்கா முயற்சி -திவயின என்ற சிங்கள வாரஇதழ்

380 0
dav

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வரும் அமெரிக்கா, வடமாகாணத்தில் தமிழரசுக் கட்சிக்கு ஈடாகப் பிறிதொரு கட்சியை உருவாக்க இரகசிய முயற்சி எடுத்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள வாரஇதழ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காகக் கொழும்பில் இயங்கும் அமெரிக்காவின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் 500 மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டிருப்பதாகவும் திவயின வாரஇதழ் அம்பலப்படுத்தியுள்ளது. திவயின என்ற சிங்கள நாளேட்டின் ஞாயிறு வாரஇதழ் சனிக்கிழமை வெளியிடப்படுகின்றமை வழமையாகும்.

இந்த ஞாயிறுவார இதழ் செய்தியில் அமெரிக்காவின் இரகசிய நகர்வு எனக் குறிப்பிட்டுக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக தகவல்கள் கசியத் தொடங்கிய நிலையில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உயரதிகாரியான ட்ரவிஸ் காட்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ் செயற்படும் அரச சார்பற்ற நிறுவன அமைப்பின் பொதுச் செயலாளர் அலுவலகத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டார்.

ஆனாலும் அந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த இரகசிய செயற்பாட்டிற்குப் பின்னால் இருக்கின்ற தமிழ் பிரமுகர் ஒருவரையும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனங்களின் அமைப்பின் பொதுச்செயலாளர் செயலகம் அடையாளம் கண்டிருக்கின்றது.

இதேவேளை, யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உயரதிகாரியான ட்ரவிஸ் காட்னர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கான வீசா செயற்பாடுகள் யாவையும் நீதியமைச்சே மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் தனியான நாடொன்றை உருவாக்கும் இந்த இரகசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மொணராகலை மாவட்டத்தில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திவயின சிங்களவார இதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்குத் தமிழர்தாயகப் பகுதியில் தமிழரசுக் கட்சியை மையமாகக் கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் சிறிய கட்சிகளும் ஈழத்தமிழர் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளிடம் கையளிப்பதற்காகப் பொது ஆவணம் தயாரிக்கப்பட்டபோது, அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் பங்குபற்றியிருந்தன. கட்சி ரீதியாக வெவ்வேறு கோணங்களில் செயற்பட்டாலும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் இருந்து இந்தக் கட்சிகளினால் இலகுவில் மாறிவிட முடியாது.

கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களக் கட்சிகள் தமது முகவர்களாக தமிழ் பிரதிநிதிகளை தாயகப் பிரதேசங்களில் போட்டியிட அனுப்பினாலும், அவர்களினால் வெற்றிகொள்ள முடியவில்லை.

ஆனாலும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், சலுகை, நிவாரணம். தொழில் வாய்ப்பு என்ற பிரச்சாரங்களில் ஏமாற்றமடைந்த மக்கள் பலர் தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளின் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு வாக்களித்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில், கொழும்பில் அமெரிக்கத் தூதரகம் தமிழர் தாயகமான வடமாகாணத்தில் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு மாறாகப் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஏன் முயற்சித்தது என்ற கேள்விகள் எழுகின்றன. சிங்கள வாரஇதழில் வெளியான செய்தியின் உண்மைத் தன்மை ஒருபுறம் இருக்க அவ்வாறான முயற்சி ஒன்றில் அமெரிக்கா ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன என்பது கண்கூடு.