ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் – 62 கைதிகள் பலி

233 0

ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் ஏற்பட்டு, அதில் 62 கைதிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும். ஆனால் அந்த சிறைகளில் தற்போது 38 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைகளில் இப்படி அளவுக்கு அதிகமான கைதிகளை அடைத்து வைப்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது. குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர் கள் தனிக்குழுக்களாக பிரிந்து அடிக்கடி கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.‌

இது ஒருபுறமிருக்க இந்த 38,000 சிறை கைதிகளை கண்காணிக்க வெறும் 1,500 சிறைக்காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே ஓங்கியுள்ளது.

மேற்கூறிய காரணங்களால் ஈகுவடார் சிறைகளில் அடிக்கடி கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதில் ஏராளமான உயிர் பலிகள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 90 நாட்களுக்கு அவசரநிலையை அந்த நாட்டின் அதிபர் மோரேனோ பிரகடனப்படுத்தினார். ஆனாலும் சிறைகளில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால் உயிர் பலிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள 3 சிறைகளில் ஒரே நேரத்தில் பெரும் கலவரம் வெடித்தது.

முதலில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த இரு தரப்பு கைதிகளிடையே மோதல் வெடித்தது.‌ இருதரப்பினரும் பட்டாக்கத்தி, வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் கைதிகள் பலர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இதனால் சிறை முழுவதும் ரத்தக்களறியாக காட்சி அளித்தது.

இந்த கோர சம்பவத்தில் 21 கைதிகள் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதே போல் அந்த நாட்டின் தெற்கு பகுதியில் குயெங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கலவரமாக வெடித்தது.

கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொண்ட கைதிகள் துப்பாக்கிகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.‌ இந்தக் கலவரத்தில் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். 10-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்தனர்.

இதுதவிர ஈகுவடாரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லடகுங்கவா நகரில் உள்ள ஒரு சிறையிலும் கைதிகள் இடையில் கலவரம் ஏற்பட்டது. இதில் 8 கைதிகள் பலியாகினர். இதையடுத்து 3 சிறைகளிலும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக் குள் கொண்டு வரப்பட்டது.

முன்னதாக சிறைகளில் கலவரம் நடந்தபோது அங்கு உள்ள கைதிகளின் உறவினர்கள் பலர் தங்களின் அன்பானவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள சிறைகளுக்கு வெளியே கண்ணீர் மல்க காத்திருந்தனர்.