அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மாறுபாடு அடைந்துள்ள புதிய கொவிட்-19க்கு ஏற்புடையதாக இல்லை-சஜித்

243 0

ஓக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, மாறுபாடு அடைந்துள்ள புதிய கொவிட்-19க்கு ஏற்புடையதாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள ஓக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “ஓக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட சோதனையில், மாறுபாடு அடைந்துள்ள புதிய கொவிட்-19க்கு ஏற்புடையதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதேவேளை இந்தியா நன்கொடையாக வழங்கிய தடுப்பூசிகளை தவிர மேலதிகமாக தடுப்பூசிகளை பெறுவதற்கு அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்த நாட்டில் 22 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும்,  600,000  தடுப்பூசிகள் மாத்திரமே இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக  தடுப்பூசிகள் தேவை என்பதையும்  அரசாங்கம் மறந்துவிட்டது.

அத்துடன் மேலதிகமாக தேவைப்படுகின்ற தடுப்பூசிகளை கொண்டுவருவதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.