காதலர் தினத்தையொட்டி திருப்பூர் சந்தைக்கு ஒரு டன் ரோஜாப்பூ விற்பனைக்காக நேற்று கொண்டு வரப்பட்டிருந்தது.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பூக்களை கொண்டுவந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதுபோல் அங்கு கடை வைத்திருப்பவர்களும் பல்வேறு பகுதிகளில் பூக்கள் மற்றும் காய்கறிகளை வாங்கியும் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த மார்க்கெட்டிற்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். ஒவ்வொரு சீசன்களின் போதும் அந்த சீசனுக்கு ஏற்ற வகையிலான பூக்கள் மற்றும் காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தின்போது காதலர்கள் தங்களது காதலி மற்றும் காதலனுக்கு ரோஜாப்பூ மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். இதனால் இந்த தினத்தில் ரோஜாப்பூ விற்பனை அதிகமாக இருக்கும். இதற்கிடையே காதலர் தினத்தையொட்டி திருப்பூர் மார்க்கெட்டிற்கு நேற்று ஒரு டன் ரோஜாப்பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரோஜாப்பூ தான். இதனால் ஓசூரில் இருந்து நேற்று ஒரு டன் ரோஜாப்பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. ஒரு ரோஜாப்பூ கட்டில் சுமார் 15 முதல் 20 வரை ரோஜாப்பூக்கள் இருக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டது.
இதில் ஒரு ரோஜாப்பூ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. ரோஜாப்பூக்களை வியாபாரிகள் மற்றும் காதலர்கள் உற்சாகமாக நேற்று வாங்கிசென்றார்கள். காதலர் தினம் என்பதால் மற்ற பூக்களின் விற்பனை நேற்று மந்தமாக தான் இருந்தது. நாளை (இன்று) காதலர் தினம் என்பதால் ரோஜாப்பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

