தடைகளை உடைத்தெறிந்து முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் மன்னர் நோக்கி செல்லும் தமிழர் உரிமைப் பேரணி!!!(படங்கள் இணைப்பு )

223 0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்தை ஆரம்பித்துள்ளதுடன் வவுனியா நகரில் பேரணிக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பேராதரவை வழங்கியிருந்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பித்த பேரணி, மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக கொறவப்பொத்தானை வீதியை அடைந்து பண்டாரவன்னியன் சிலையடியில் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் பந்தல் இடத்திற்கும் குறித்த பேரணி சென்றிருந்தது.

இதற்கிடையில், வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்தத இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் பேரணியுடன் இணைந்து பண்டாரவன்னியன் சிலை வளாகம் வரை சென்றிருந்தனர்.

இதன்பின்னர், மத குருக்களால் பண்டாரவன்னியன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரணி, நெளுக்குளம் சென்று அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து மன்னார் நோக்கி பேரணி செல்கின்து.

இந்தப் பேரணியில், சிவில் சமூக அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சி.ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செ.கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சீனிதம்பி யோகேஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியூதீன், செ.மயூரன், ப.சத்தியலிங்கம், மற்றும் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதல், தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை, காணாமல் ஆ க்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி நீதிகோரி இந்த பேரெழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணி நாளைய தினம் யாழ்ப்பாணம், பொலிகண்டியைச் சென்றடைந்து நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.