யாழில் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்த முடியாது- நீதிமன்றம் தடை!

317 0

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கே இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட்-19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த பேரணி, பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி நடைபெற்று வருவதுடன் எதிர்வரும் ஆறாம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares