ஜப்பானில் அவசர நிலை மார்ச் 7 வரை நீட்டிப்பு

310 0

ஜப்பானில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 7ஆம் தேதிவரை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் சுகா கூறும்போது, ”கரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 7 ஆம் தேதி வரை நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

கரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் பிரதமர் சுகா, அமைச்சர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரப் பாதிப்பைத் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.