சுதந்திர தினத்தையிட்டு கிளிநொச்சியில் போராட்டத்துக்கு அழைப்பு!

205 0

இலங்கையின் சுதந்திர தினத்தில், கரிநாளாகவும் கருப்புப்பட்டி அணிந்தும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம், நாளை இரண்டாம் திகதியிலிந்து ஆறாம் திகதி வரையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெறும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவிக்கையில், “எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் கறுப்புப்பட்டி அணிந்து நாளை இரண்டாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. இதேவேளை வரும் மூன்று மற்றும் நான்காம் திகதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளளோம்.

குறித்த போராட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்க உறுப்பின்கள், பேருந்து உரிமையாளர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.