யாழ்ப்பாணத்தையும் குறிவைத்துள்ள தொல்பொருள் அகழ்வு!-நிலாவரையில் திடீர் அகழ்வாய்வில் தொல்லியல் திணைக்களத்தினர்!

373 0

நிலாவரைப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று காலை திடீரென அகழ்வு ஆராய்ச்சிப் பணி என்ற பெயரில் தோண்டுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னறிவித்தல் ஏதும் இன்றி இந்தப் பணிகளில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமை மக்கள் மத்தியிலும், மக்கள் பிரதிநிதிகள் மத்தியிலும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அறிந்து வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் அந்த இடத்துக்கு விரைந்து நிலைமைகளை அவதானித்து, இது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினரிடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது தொல்லியல் ஆய்வுக்காகவே இந்த இடத்தில் தோண்டும் பணி இடம்பெறுவதாக தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நிலாவரை சுற்றுலா வலயம் என்பதன் அடிப்படையில் இங்கு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு தொல்லியல் பொருள்கள் எவையேனும் இருந்தால் அவற்றைக் காட்சிப்படுத்தும் நோக்குடனே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கட்டுமானப் பணிகள் ஏதேனும் இங்கு மேற்கொள்ளும் நோக்கம் உள்ளதா? எனவும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ், தொல்லியல் திணைக்களத்தினரிடம் கேள்வி எழுப்பினார். எனினும் அவ்வாறு எந்த நோக்கமும் இல்லை என தொல்லியல் திணைக்களத்தினர் பதிலளித்ததாக நிரோஷ் தெரிவித்தார்.

தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வாய்வு என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த அகழ்வாய்வு குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.