அபுதாபியில் மேலும் 3 வாரங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள்- அரசு உத்தரவு

247 0

அபுதாபி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மேலும் 3 வாரங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அபுதாபி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்தன. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வகுப்புகள் நேரடியாக செயல்படும் என கடந்த வாரம் அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது மேலும் 3 வாரங்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடருமாறு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க அச்சம் தெரிவித்து வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை பேணும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை கமிட்டியின் வழிகாட்டுதல் படி ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடர்ந்து நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒருமுறை மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வருவதற்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் இந்த உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது 2-வது முறையாக இந்த உத்தரவு மீண்டும் விலக்கி கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வது தடைபட்டுள்ளது. மீண்டும் பள்ளிக்கூடம் செல்லலாம் என மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டிருப்பது மாணவ, மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பெற்றோர்கள், குழந்தைகளை வீட்டிலேயே வைத்து பாடங்களை நடத்துவது அவர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதில் சிரமம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே இயல்பு நிலை திரும்பி மீண்டும் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டிய நிலைமை விரைவில் ஏற்பட வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.