ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான்: விஜய் வசந்த்

24 0

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான் என்று தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை மாவட்ட வர்த்தகபிரிவு காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், பொதுச் செயலாளர் காமராஜ், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்கொடி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் விஜய்வசந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் கட்சி மேலிடம் முடிவு செய்தால் போட்டியிடுவேன். மற்றபடி மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பதே விருப்பம். முதலில் வியாபாரம், பின்பு சினிமா என இருந்தது. சினிமாவுக்கு பொழுதுபோக்காக சென்றேன். ஆனால் தற்போது முழு நேர அரசியலில் மட்டும் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான். தற்போது காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தேர்தலில் அ.தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தி, காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.