ஜெனீவா தொடர்பில் தமிழ் கட்சிகள், வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்கள் என்பன ஒரு புள்ளியில் சந்திக்க கூடிய வகையில் முயற்சிகள் இடம்பெறுகின்றது!

302 0

ஜெனீவா தொடர்பில் தமிழ் கட்சிகள், வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்கள் என்பன ஒரு புள்ளியில் சந்திக்க கூடிய வகையில் முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா விவகாரத்தை எவ்வாறு கையாள்வது தொடர்பில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனீவா அமர்வுகள் வருகின்ற நிலையில் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து மனிதவுரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டு அவை பூச்சியத்தில் உள்ளது. எதிர் காலத்தில் எப்படிப்பட்ட அணுகுமுறை எடுப்பது என்பது சம்மந்தாக பேசியுள்ளோம். 2012 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனி அது சம்மந்தமான தெளிவான நிலைப்பாபட்டை வலியுறுத்தி வந்துள்ளது.

கட்சிகள் மட்டத்தில் மனிதவுரிமை பேரவையில் பொறுப்பு கூறல் சம்மந்தமாக இருக்கக் கூடிய பலவீனத்தை விளக்கிக் கொள்ளக் கூடியதாக இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலதிகமாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் ஒரு புள்ளியில் சந்திக் கூடிய வகையில் உறுப்புநாடுகள், மனிதவுரிமை பேரவை, மனிதவுரிமை ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான செய்தியினை கொடுக்கும் முயற்சிகள் இடம்பெற வேண்டும் என்பதில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது சம்மந்தமாக நடவடிக்கைள் எடுப்பதற்கு சுமந்திரன், விக்கினேஸ்வரன் அவர்களின் பிரதிநிதி மற்றும் நான் உட்பட சிறு குழு ஒன்று இணைந்து ஒரு ஆரம்ப ஆவணம் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.