மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது

198 0

வெள்ளிச்சந்தை அருகே 16 வயது சிறுமி மீதான மோகத்தால் மனைவியை கொன்று நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பனிபிச்சை. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மேகலா (வயது 32) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 17-ந்தேதி மேகலா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடல்நலம் சரி இல்லாமல் இறந்ததாக பனிபிச்சை உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து மேகலாவின் உடல் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேகலாவின் 30-வது நாள் நினைவு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் அவரது உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பனிபிச்சை தனது உறவுக்கார பெண்ணின் 16 வயது மகளுக்கு காதல் வசனங்களுடன் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார்.

அதில், தனது மனைவியை கொன்றதாகவும் கூறி இருந்தார். அந்த கடிதத்தை பார்த்த மேகலாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து மேகலாவின் சகோதரர் அந்தோணி அடிமை வெள்ளிச்சந்தை போலீசில் தனது சகோதரி மேகலா சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் மேகலாவின் கணவர் பனிபிச்சையை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேகலாவை கொலை செய்து விட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் பனிபிச்சையை கைது செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட மேகலாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட பனிபிச்சை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கும், மேகலாவிற்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு மேகலாவின் உறவினரின் 16 வயது மகள் அடிக்கடி எங்களது வீட்டிற்கு வந்தார். எனக்கு அவர் மீது ஆசை ஏற்பட்டது.

இதை அறிந்த கொண்ட எனது மனைவி என்னை பலமுறை கண்டித்தார். சிறுமியை அடைவதற்கு எனது மனைவி தடையாக இருந்தார். இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த மாதம் 17-ந்தேதியும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை அடித்தேன். அவர் மயங்கி கீழே விழுந்தார்.

நீண்ட நேரமாகியும் அவர் எழும்பவில்லை. அவரை தூக்கி பார்த்தேன். அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இதிலிருந்து தப்பிக்க திட்டம் தீட்டினேன். எனது மனைவி ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி நாடகமாடினேன்.

அவர்களும் நம்பி விட்டார்கள். எனவே இதில் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்தேன். எனது மனைவி இறந்த பிறகு நடந்த 30-வது நாள் திருப்பலியில் கலந்து கொள்வதற்காக வந்த 16 வயது சிறுமியிடம் கடிதம் ஒன்று எழுதி கொடுத்தேன். அந்த சிறுமி அந்த கடிதத்தை தனது தாயாரிடம் கொண்டு கொடுத்துள்ளார். இதனால் நான் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.