கொரோனா நிவாரண நிதி மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளிக்க வேண்டும்

257 0

உலக அளவில் கொரோனா வைரஸ்  பாதிப்பில் முதலிடத்திலுள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டொலரை  ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இது தொடர்பான கொரோனா நிவாரண மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டால் தான் அது சட்டமாக்கப்பட்டு, கொரோனா நிவாரணத்துக்கான நிதி ஒதுக்கப்படும்.

ஆனால், இந்த மசோதாவில் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கிப்பதாகவும், வெளிநாடுகளே அதிக பலனடைவதாகவும் கூறி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ட்ரம்ப் மறுத்து வருகிறார்.

மேலும், கொரோனா நிவாரணமாக அமெரிக்கர்களுக்கு தலா 600 டொலர் வழங்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டிருப்பதை 2000 டொலராக அதிகரிக்கும்படியும் ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், கொரோனா நிவாரண மசோதா சட்டமாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், கொரோனா நிவாரண மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட மறுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் 1 கோடி அமெரிக்கர்கள் வேலையின்மை காப்பீடு பலன்களை இழக்க நேரிடும் எனவும்  பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்