ரூபாவை பாதுகாக்க மத்திய வங்கி நடவடிக்கை

204 0

செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுகின்றது.

அதற்கமைய, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி சந்தையில் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதற்குப் பின்னர் பொருத்தமான தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். இந்நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதுடன் ஒன்றிணைந்து 2020 நவெம்பரில் அவதானிக்கப்பட்ட ஐ.அ.டொலர் ஒன்றுக்கு ரூ.185 இற்குக் கீழ் மட்டங்களை நோக்கி அடுத்துவரும் சில நாட்களினுள் ரூபா உயர்வடைவதை இயலச்செய்யும்.

அலுவல்சார் ஒதுக்குகள் போதுமான மட்டத்தில் காணப்படுகின்றது என்பதனை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகின்றது. தற்போது, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 5.6 பில்லியனாகக் காணப்படுகின்றது. ஒதுக்குகளின் மட்டத்தினை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடனான கலந்துரையாடல்களும் இறுதி மட்டத்தினை எட்டியுள்ளது.

இவ் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்களின் கிடைப்பனவுகளும் அதேபோன்று வெளிநாட்டு செலாவணி வருவாய்கள் விரிவடைவதற்கு வழிவகுக்கின்ற உள்நாட்டு உற்பத்திப் பொருளாதாரத்தின் முன்னெடுக்கப்படுகின்ற மேம்படுத்தல்களும் செலாவணி உறுதிப்பாட்டினைப் பேணுகின்ற அதேவேளை எதிர்வரவுள்ள காலங்களில் இலங்கையின் படுகடன் கடன்பாடுகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கும் வசதியை ஏற்படுத்தும்.