பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு- மாதம் 7,500 ரூபாய் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

242 0

கவனக்குறைவாக எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சத்துணவிற்காக மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், மருத்துவர்கள் சத்தான உணவு, பழங்களை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் சத்துணவிற்காக மாதந்தோறும் ரூ.7500 ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தற்போது அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதால், அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை பணியாளர் வழங்குவது குறித்து அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணிற்கான மருத்துவ வசதிகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து நாளை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.