கிளிநொச்சி சேவைச்சந்தை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் திறக்கப்படுகின்றது

236 0

கிளிநொச்சி சேவைச் சந்தையை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை (புதன்கிழமை) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சேவைச்சந்தையின் மரக்கறி தவிர்ந்த ஏனைய வர்த்தக செயற்பாடுகளையும் நாளைமுதல் முழுமையாக முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மரக்கறி விற்பனை நிலையங்கள் தவிர்ந்த வர்த்தக செயற்பாடுகள் நாளைமுதல் முழுமையாக நடைபெறவுள்ளன.

இதேவேளை புடவை வாணிபங்களை இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வர்த்தக நிலையங்கள் நாளை காலைமுதல் வழமைபோன்று திறக்கப்பட்டு, வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்க சுகாதார துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சுகாதார நடைமுறைகள் மற்றும் நெரிசல்கள் அவதானிக்கப்பட்டு, நாளை மறுதினம் அல்லது அடுத்து வரும் நாட்களில் சேவை சந்தையின் மரக்கறி வாணிபங்களை திறந்து, வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பேணுவது தொடர்பில் சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ள அதேவேளை, அவற்றை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சேவை சந்தை வளாகம் ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது சந்தைகளைவிட போதுமான இட வசதிகளை கொண்டுள்ளமையாலும், தனி தனியான கடை தொகுதிகளை கொண்டுள்ளமையாலும் வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக, இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இந்த விசேட அனுமதி சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளை மீறும் சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் மீண்டும் மூடுவதற்கு, சுகாதார தரப்பினர், பிரதேச சபையினர் மற்றும் வர்த்தகர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.