புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை- மத்திய மந்திரி வி.கே.சிங் உறுதி

231 0

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தஞ்சையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

தஞ்சையில் நேற்று விவசாயிகள் நண்பன் மோடி என்ற தலைப்பில் பா.ஜ.க. சார்பில், வேளாண்மை சட்டங்களை விளக்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் பி.எல்.அண்ணாமலை, விவசாயிகள் அமைப்பை சேர்ந்த மன்னார்குடி ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படுகிறது. எதிர்க்கட்சியினர் முன்பு காவிரி பிரச்சினை பற்றி பேசி வந்தனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும் என பலர் கூறி வந்தாலும், அதை யாரும் அமல்படுத்தவில்லை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததும் அந்த அறிக்கையை கவனமாக பரிசீலித்து ஒவ்வொரு திட்டமாக அறிவித்து வருகிறார்.

தற்போது விவசாயிகளை, எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரத்தால் ஏமாற்றி வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். எந்த பாதிப்பும் கிடையாது.

வெளிச்சந்தையில் என்ன விலை உள்ளதோ அங்கு விற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த சட்டத்தின்படி ஒப்பந்தத்தில் பிரச்சினை என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. அந்தந்த மாவட்ட கலெக்டரே பிரச்சினையை தீர்த்து வைக்கலாம்..

ஒப்பந்த விவசாயம் என்பது புதிதல்ல, இந்தியாவில் பல மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தில் நிலம் பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லை.

இந்த சட்டங்களில் உள்ள நன்மைகளை தமிழக விவசாயிகளும், குறிப்பாக டெல்டா விவசாயிகளும் தான் இந்தியாவில் உள்ள பிற விவசாயிகளுக்கு எடுத்து கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.