தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.
தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 24-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் 16-வது சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்ய தொடங்கி உள்ளது.
தமிழக தேர்தலுடன், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
அநேகமாக தமிழகத்தில் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரங்களில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அட்டவணை பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே அவகாசம் இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் 5 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தின் பிரதான செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தேர்தல் ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேமாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 6 அதிகாரிகளில் சிலர் நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னை வந்தனர். அவர்களை தமிழக தேர்தல் குழு அதிகாரிகள் வரவேற்றனர். இன்று பகல் 11 மணிக்கும், 12 மணிக்கும் மற்ற அதிகாரிகள் சென்னை வந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
முதலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்ளன.
ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் தலா 2 பிரதிநிதிகள் வீதம் வந்து சந்திக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் ஆகிய இருவரும் சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசினார்கள். தங்களது கருத்துக்களை மனுவாக அளித்தனர்.
தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக்கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆகிய இருவரும் சென்றனர். அவர்களும் தி.மு.க.வின் கருத்துக்களை மனுவாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் விருப்பம். இதை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தெளிவாக தெரிவித்து உள்ளோம். மேலும் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் ஏற்கனவே பல்வேறு புகார்களை தெரிவித்து உள்ளோம்.
அதன் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தெரிந்துகொள்ள கேட்டுள்ளோம். குறிப்பாக 80 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் திட்டத்தை ரத்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளோம். தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்காவிட்டால் கோர்ட்டுக்கு செல்லவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் மாநில துணை தலைவர் ஆர்.தாமோதரன், வக்கீல் இணைய அமைப்பாளர் எஸ்.கே.நவாஸ் இருவரும் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத் திடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.
இந்த வாக்காளர்கள் அனைவரும் உண்மையான வாக்காளர்கள் என்பதை தேர்தல் ஆணையம் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலை ஒரே பட்டியலாக வெளியிட வேண்டும். கூடுதல் இணைப்புகள் இருக்க கூடாது. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் புகைப்படங்கள் தற்போது கறுப்பு-வெள்ளையாக உள்ளன.
அவற்றை கலரில் வெளியிட வேண்டும். தற்போது ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்கு சாவடி வீதம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழகத்தில் வாக்குசாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதை அமல் படுத்தக்கூடாது. பீகாரில் இத்தகைய திட்டம் காரணமாக பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன.
எனவே 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கேற்ப கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் தேர்தல் ஆணையம் செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பா.ஜனதா கட்சி சார்பில் மாநில துணைத்தலைவர்கள் எம்.என்.ராஜா, சக்கரவர்த்தி இருவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் இருவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் என். பெரியசாமி, டி.மூர்த்தி கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளில் இருந்தும் தலா 2 உறுப்பினர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து கருத்துக்களை தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காவல்துறை கண்காணிப்பு அதிகாரிகளுடனும், தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார்கள். காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. வருமானவரித்துறை அதிகாரிகளிடமும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
நாளை (செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை தலைமை செயலாளர், காவல்துறை இயக்குனர், அரசு துறைகளின் செயலாளர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகு நாளை மதியம் பத்திரிக்கையாளர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சந்தித்து பேச இருக்கிறார்கள்.
அது முடிந்ததும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

