சாலை விபத்து, நீரில் மூழ்கி உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி தோணுகால் கிராமத்தில் தேங்கியிருந்த மழைநீரில் நாலாட்டின் புதூரைச் சேர்ந்த சிறுவன் ஜெஸ்லின் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி கிள்ளியூர் தேங்காப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா ராணி சாலை விபத்தில் உயிரிழந்தார். பாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். ஏழுதேசம் கிராமத்தைச் சேர்ந்த பிரடி(எ) பெறின்கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சத்தியமங்கலம் மாதம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மெளலி, ஜீவானந்தம், திலீப்குமார் ஆகிய மூன்று நபர்கள் குட்டையில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பவானிசாகர் முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த பழனி முடுக்கன்துறை பரிசல் துறை அருகே நீரில் மூழ்கி உயிரிழந்தார். புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அன்பரசன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மேட்டூர் விருதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சாலை விபத்தில் உயிரிழந்தார். வாழப்பாடி சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணி மனைவி சாந்தி மரம் விழுந்து உயிரிழந்தார்.
செஞ்சி நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், முருகன் ஆகிய இருவரும் ஏரியில் குளிக்கும் போதுநீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவிநாசி பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ் செல்வனின் மகன்கள் அகிலேஸ்வரன், பாலன் ஆகிய இருவரும் பாறைக்குழியில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பொன்னேரி கூனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாலன் மீன் பிடி பணியின் போது வலையில் சிக்கி உயிரிழந்தார். ஆவடி வெள்ளானூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டை விராலிமலையைச் சேர்ந்த காத்தவராயன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

