குளத்துக்குள் பாய்ந்த கெப் வாகனம்! 2 குழந்தைகள் உட்பட மூவர் பலி!

318 0

முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் பாய்ந்து கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு குழுந்தைகளும் மற்றும் நபரொருவரும் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்று நேற்று (19) மாலை குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் குறித்த வாகனத்தில் பயணம் செய்த சிறுவன் ஒருவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வாகனத்தின் உடைய சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன், அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும் நடவடிக்கையில் பொலீசார், படையினர், பொதுமக்கள் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 அகவையுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தினை பார்வையிட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் தெரியவந்துள்ளது.