கொரோனா அச்சம் – ஹட்டனில் மூன்று கடைகளுக்கு பூட்டு

210 0

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மாலை மூடப்பட்டன.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின்போது குறித்த தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே குறித்த கடைகள் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன், அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு புடவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார்.

எனினும் குறித்த வங்கியில் முறையாக சுகாதார வழிமுறைகள் பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்புகொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சி.சி.டிவி கமராவின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.