சென்னையில் நாளை அதிமுக, திமுக கிறிஸ்துமஸ் விழா- எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

209 0

அ.தி.மு.க. சார்பில் நாளை மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா அ.தி.மு.க.- தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டும் சென்னையில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை சிறப்பாக கொண்டாட 2 கட்சிகளும் ஏற்பாடு செய்துள்ளது.

அ.தி.மு.க. சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்‌ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள். அமைச்சர்கள், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களும், முக்கிய பிரமுகர்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் பங்கேற்பவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அ.தி.முக. தலைமை கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே போல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சாந்தோமில் நாளை மாலை நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்கிறார்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் அனைத்து மத தலைவர்களும் கலந்து கொள்ளும் “ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்” பெருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிறிஸ்துமஸ் உரையாற்றுகிறார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு தலைமை காஜி சாஹூத்தீன் முகமது அய்யூப், தவத்திரு குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் தேவசகாயம், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மொய்த்தீன் பாகவி, பெந்தெகொஸ்தே திருச்சபை பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப், தமிழ் சைவ பேரவை தலைவர் கலையரசி நடராசன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அனைவரையும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதய ராஜ் வரவேற்கிறார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அன்புரோஸ் நன்றி கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிற மாவட்டங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவை காணொலி காட்சி வாயிலாக ஒருங்கிணைத்து விழாவில் மேடையில் ஒலிபரப்பப்படுகிறது.

திருச்சி கலைக்காவேரி குழுவினரின் வரவேற்பு நடனம், கோவை பாத்திமா சர்ச் குழுவினரின் கிறிஸ்துமஸ் பாடல்கள், புதுக்கோட்டை ஆண்டனி ஜெயராஜ் அடிகளாரின் ஜெப வழிபாடு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

சென்னையில் நாளை மாலை அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தனித்தனியாக நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.