மாநகராட்சி பெண் ஊழியர் கழுத்தை அறுத்து கொலை- போலீசில் கணவர் சரண்

281 0

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மாநகராட்சி பெண் ஊழியரான தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

சென்னையை அடுத்த சின்ன நீலாங்கரை மேட்டு காலனி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஹரி (வயது 36), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கோமதி (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கோமதி, சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். ஹரிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஹரி, தனது மனைவி கோமதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கோமதி நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது ஹரி மீண்டும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஹரி, வீட்டில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.
இதில் படுகாயம் அடைந்த கோமதி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அதே கத்தியுடன் ஹரி, நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கோமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு போலீசில் கணவர் சரண் அடைந்ததால் அவர்களது 2 பிள்ளைகளும் தாய்-தந்தை இன்றி பரிதவித்த காட்சி அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.