வடக்கில் கடந்த இரண்டு வாரங்களில் 90 பேருக்கு கொரோனா தொற்று!

186 0

வடக்கில் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இதுவரை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மருதனார்மடத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளுக்கும் பரவியுள்ளதாகவும், இதற்கும் தம்புள்ள சந்தைக்கும் தொடர்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய 76 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “பண்டாரநாயக்க விமான நிலைய ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்ட 325 பேரிக் மாதிரிகளின் முடிவுகள் இன்று காலை கிடைத்திருந்தன.

இதில், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த திருநெல்வேலி சந்தை வியாபாரியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதேவேளை, முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட 204 மாதிரிகளின் முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், அதில் யாருக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய 110 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து இதுவரை வடக்கில் 90 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 78 பேர், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வரைத் தவிர ஏனைய 74 பேரும் மருதனார்மட சந்தைப் பரம்பலுடன் தொடர்பில் உள்ளவர்கள் என வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருதனார்மட சந்தை பரம்பலை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து பொதுச்சந்தைகளிலும் பிசிஆர் சோதனை நடத்தினோம். இதுவரை மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம், திருநெல்வேலி ஆகியவற்றில் தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் தொடர்புயைடயவை. எனவே மருதனார்மடத்தில் ஆரம்பித்த தொற்று ஏனைய 3 சந்தைகளிற்கு பரவியுள்ளது. இந்த தொற்று தொடர்ந்து பரவ வாய்ப்புள்ளது. பொதுச்சந்தைகளிற்கும் தென்பகுதிக்கு- குறிப்பாக தம்புள்ளைக்கும் தொடர்புகள் உள்ளன.

எனவே, பொதுச்சந்தைகளிற்குள் தொற்று ஏற்பட்டு மக்களிற்கு தொற்று பரவலாம். பரம்பலை கட்டுப்படுத்த, வடக்கிலுள்ள அனைத்து பொதுச்சந்தைகளையும் மூட சிபாரிசு செய்துள்ளோம். தொற்று கட்டுக்குள் வந்ததும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தைகளை ஆரம்பிக்கலாம்.