கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அந்தந்தப் பிரதேச ஆலயங்களும் தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சைவ மகா சபை தெரிவிக்கையில், “உலகையே அச்சுறுத்திவரும் கொடிய தொற்று நோயான கொரோனா தற்போது யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியை ஆக்கிரமித்து நிற்கின்றது.
இக்கிருமித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இதேபோன்று தொற்றாளர்களுடன் தொடர்புடைய பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றன.
இவ்வாறான நிலைமைகளின் போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிப்பொருட்கள் தாமதமாகவே கிடைக்கின்றன. அன்றாடம் உழைத்து சீவியம் நடத்தும் குடும்பங்கள் உணவுக்கு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதன்போது, பிரதேசத்தில் உள்ள ஆலயங்களும் தன்னார்வலர்களும் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக உதவ வேண்டும். இது இறைவனுக்கு செய்யும் தொண்டுக்கு நிகராகும்” என சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

