காத்தான்குடியில் வேகமாகப் பரவும் டெங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை

346 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபைப் பிரிவில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அது தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டமொன்று இன்று (14) திங்கட்கிழமை காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது.

  
இக்கூட்டத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ஆசாத் ஹசன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சர் மருத்துவர் எம்.எஸ்.ஜாபீர், காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன், காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பசீர், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றங்களுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எம்.முஸ்தபா உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் பள்ளிவாயல்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் அரபுக் கல்லூரிகளின் நிர்வாகிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸார், இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது காத்தான்குடியில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அவசரமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு காத்தான்குடி முழுவதுமாக டெங்கு விழிப்புனர்வு வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வதுடன் பள்ளிவாயல்கள் ஊடாகவும் இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை மேற் கொள்வது எனவும் இதற்கு அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

காத்தான்குடியில் கடந்த 12 நாட்களில் 30 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.